லாரி மோதி அண்ணன்-தம்பி பலி
சங்கரன்கோவில் அருகே விபத்தில் சிக்கி சாலையில் கிடந்த அண்ணன்-தம்பி லாரி மோதி பரிதாபமாக பலியானார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சமுசிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன்கள் மாணிக்கவேல் (வயது 23), சங்கரேஸ்வரன் (21). இதில் சங்கரேஸ்வரன் அம்பை அருகே உள்ள இடைகாலில் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மாணிக்கவேல் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை ெசய்து வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக சங்கரன்கோவிலுக்கு சென்றனர். மோட்டார் ைசக்கிளை சங்கரேஸ்வரன் ஓட்டினார். மாணிக்கவேல் பின்னால் அமர்ந்து இருந்தார்.
சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னால் சென்ற ஒரு லாரியை முந்திச் சென்றனர். அந்த சமயத்தில் எதிரே ஒரு வேன் வந்து கொண்டு இருந்தது. அந்த வேன், மோட்டார் சைக்கிளில் பின் பகுதியில் லேசாக மோதியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி மாணிக்கவேல், சங்கரேஸ்வரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் சிக்கிய அவர்கள் சுதாரித்து எழுப்புவதற்குள் பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கவேல், சங்கரேஸ்வரன் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து உடனடியாக கரிவலம்வநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவரான மாரிமுத்து என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள். சங்கரன்கோவில் அருகே லாரி மோதி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story