பூ வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி


பூ வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 9 March 2022 8:52 AM IST (Updated: 9 March 2022 8:52 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பூ வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் பூ வியாபாரி உள்பட 3 பேரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூ வியாபாரி
சேலம் அருகே உள்ள வீராணம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45), பூ வியாபாரி. அவருடைய செல்போன் எண்ணின் வாட்ஸ் அப்புக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், பூக்களின் புகைப்படங்களை அனுப்பியதுடன் இதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பிய பெருமாள், வாட்ஸ்-அப் எண்ணில் கூறப்பட்டிருந்த வங்கி கணக்குக்கு ரூ.49 ஆயிரத்து 275 செலுத்தினார்.
ஆனால் அதன் பிறகு பூக்கள் எதுவும் அனுப்பவில்லை. மேலும் வாட்ஸ் அப் அனுப்பிய எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெருமாள் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரெடிட் கார்டு
சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (41). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், உங்களது கிரெடிட் கார்டில் பணபரிவர்த்தனையை அதிகரித்து தருவதாக கூறினார். இதை நம்பிய நாகராஜ், மர்ம நபரிடம் கிரெடிட் கார்டின் விவரங்களையும், ஓ.டி.பி. எண்ணையும் தெரிவித்தார்.
இதையடுத்து அவரது கணக்கில் இருந்து ரூ.45 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. பின்னர் இந்த மோசடி குறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெகா பரிசு
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் அணைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (28). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் பேசினார். அப்போது அவர், தங்களது செல்போன் எண்ணுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மெகா பரிசு விழுந்திருப்பதாகவும், இந்த பணத்தை பெறுவதற்கு நீங்கள் சேவைக்கட்டணம், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை ரூ.75 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் பிரபுவிடம் அந்த பணத்தை செலுத்துவதற்கான வங்கி கணக்கின் எண்ணையும் மர்ம நபர் தெரிவித்தார். இதை உண்மை என நம்பி அவர் ரூ.75 ஆயிரத்தை செலுத்தினார். அதன்பிறகு அவருக்கு பரிசு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரபு இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story