கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதியில் 74 கிலோ கஞ்சா பறிமுதல்- ஆந்திர ஆசாமிகள் உள்பட 5 பேர் கைது
சென்னை கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதியில் 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆந்திர ஆசாமிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் ஒன்று நேற்று முன்தினம் இரவு கிடைத்தது. ஆந்திராவில் இருந்து வேன் ஒன்றில் பெரிய அளவில் கஞ்சா கடத்திவரப்படுவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக துணை கமிஷனர் கார்த்திகேயன் தனி போலீஸ் படை அமைத்து, கீழ்ப்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு பகுதியில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டார்.
சேத்துப்பட்டு குருசாமி பாலம், மெக்னிக்கல் ரோடு 3-வது சந்து அருகே 3 பேர் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் 12 கிலோ கஞ்சா இருந்தது. அதை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த ஆந்திர மாநில ஆசாமிகளான ஷேக்மொய்தீன் பாட்சா(வயது 29), துர்காபிரசாத்(30), லோகநாதன் துர்கா(26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் சொன்ன தகவல் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோடு, ஆஸ்பிரின் கார்டன் சந்திப்பில் வைத்து வேன் ஒன்றை மடக்கிப்பிடித்தனர். அந்த வேனில் கடத்தி வரப்பட்ட 62 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. வேனில் வந்த பிரதீப்ராஜ்(29), வரதராஜூ(36) ஆகியோர் கைதானார்கள். வேன் பறிமுதல் செய்யப்பட்டது. ரமேஷ் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கஞ்சா வேட்டையில் மொத்தம் 74 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர ஆசாமிகள் 3 பேர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story