விவசாயி வீட்டில் ரூ.11 லட்சம் நகை கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.11 லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 9 March 2022 5:25 PM IST (Updated: 9 March 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.11 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்

ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.11 லட்சம் நகைகள் கொள்ளை போயின. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி
திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடுகன் மகன் முப்பிடாரி முத்து (வயது 45), விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மற்றவர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.
முப்பிடாரி முத்து மற்றும் குடும்பத்தினர் வேலைக்கு செல்லும்போது, வீட்டை பூட்டி சாவியை ரகசிய இடத்தில் வைத்து செல்வது வழக்கம். மேலும் அந்த சாவியுடன், பீரோ சாவியையும் வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காலையில் வேலைக்கு செல்வதும், மாலையில் வீடு திரும்புவதுமாக வழக்கமாக இருந்தனர்.
37 பவுன் நகை
இதற்கிடையே முப்பிடாரி முத்து கடந்த 4-ந் தேதி வெளியூர் செல்வதற்காக பீரோவை திறந்து நகை பையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த சுமார் 37 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அந்த இடத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மட்டும் அப்படியே இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையி்ட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சம் என்று கூறப்படுகிறது. யாரோ மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து நகையை மட்டும் திருடிக் கொண்டு பணத்தை மட்டும் விட்டுச் சென்றது ஏன்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story