வல்லநாட்டில் வியாபாரிகள் கடை அடைப்பு-ஆர்ப்பாட்டம்


வல்லநாட்டில் வியாபாரிகள் கடை அடைப்பு-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 6:19 PM IST (Updated: 9 March 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மேலூர் மாணவி கொலை சம்பவத்தை கண்டித்து வல்லநாட்டில் நேற்று வியாபாரிகள் கடை அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம்:
மதுரை மேலூர் மாணவி கொலை சம்பவத்தை கண்டித்து வல்லநாட்டில் நேற்று வியாபாரிகள் கடை அடைப்பு செய்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் நேற்று வியாபாரிகள் கடை அடைப்பு செய்தனர். மேலும் பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை மேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகலெட்சுமி என்ற மாணவி கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்தும், இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும், கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பூல்பாண்டி தலைமை தாங்கினார். பூல்பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆறுமுககனி, பகவதி ரமேஷ், சிவகுமாரசுவாமி, கார்த்திக் தம்பான், சிதம்பரம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம், நங்கமுத்து, மாரியப்பன், கொம்பையா கிருஷ்ணன், குருநாதன், கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சாலை மறியல்
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திடீரென நெல்லை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வல்லநாட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story