ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2022 6:45 PM IST (Updated: 9 March 2022 6:45 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் இருந்து கவரைப்பேட்டை-சத்யவேடு சாலை வழியாக ஆந்திராவிற்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் இருந்து சத்யவேடு செல்லும் சாலையில் நேற்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே பதிவு எண் இல்லாத மினி லோடு வேன் ஒன்று ஆந்திரா மாநிலத்தை நோக்கிச்சென்றது. அந்த வேனை போலீசார் துரத்தி சென்றனர். இதனையடுத்து வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு அதிலிருந்து 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அந்த வேனை சோதனை செய்ததில் அதில் இருந்து 40 மூட்டைகளில் 2 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசியை மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பழைய தர்மராஜா கோவில் தெரு, தணிகாசலம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள பாழடைந்த வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்டவழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரிக்க திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வி உத்ரவின் பேரில் வருவாய் அதிகாரி விஜி தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதிகளில் பதுக்கி வைத்து இருந்த 500 கிலோ ரேஷன் அரியை பறிமுதல் செய்தனர்.

Next Story