கைதான மந்திரியை நீக்கக்கோரி மும்பையில் பா.ஜனதா பேரணி
மந்திரி நவாப் மாலிக் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் மும்பையில் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதில் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
மும்பை,
மந்திரி நவாப் மாலிக் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பா.ஜனதாவினர் மும்பையில் தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இதில் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக் கடந்த மாதம் 23-ந் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இருப்பினும் மந்திரி நவாப் மாலிக் ராஜினாமா செய்யவில்லை.
இந்த நிலையில் மந்திரி நவாப் மாலிக் ராஜினாமா செய்யக்கோரி பா.ஜனதா கட்சியினர் இன்று மும்பை ஆசாத் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் முதல்-மந்திரியும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன், கிரித் சோமையா, நிலேஷ் ரானே எம்.எல்.ஏ. உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மந்திராலாயா நோக்கி பேரணி
இதில் மந்திரி நவாப் மாலிக்கை பதவி நீக்கம் செய்யும் வரை பா.ஜனதா அமைதியாக இருக்க போவதில்லை எனவும், எங்களது போராட்டம் தொடரும் என பட்னாவிஸ் பேசினார்.
பின்னர் பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்கள் தொண்டர்களுடன் மந்திராயலா (தலைமை செயலகம்) நோக்கி பேரணி புறப்பட்டனர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி இருப்பதாகவும், பேரணி நடத்த அனுமதி இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் மாநகராட்சி தலைமை அலுவலக சாலை வழியாக பேரணியாக சென்ற போது சாலை இருபுறமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கைது
இந்த நிலையில் மந்திராலாயா நோக்கி முன்னேறி செல்ல விடாமல் மெட்ரோ திரையரங்கம் சிக்னல் அருகே போலீசார் பேரணி சென்றவர்களை தடுப்பு வேலி அமைத்து மறித்தனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். முன் அனுமதியின்றி பேரணி நடத்திய தேவேந்திர பட்னாவிஸ், சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி எல்லோகேட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே பேரணி நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
Related Tags :
Next Story