அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு


அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 9 March 2022 8:20 PM IST (Updated: 9 March 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன.

பழனி:
பழனி அருகே அடுத்தடுத்து 3 அரசு பஸ்கள் மீது கல் வீசப்பட்டதில் கண்ணாடிகள் உடைந்தன.
பஸ் மீது கல்வீச்சு
பழனியை அடுத்த ஒபுளாபுரம் பகுதியில் அரசு போக்குவரத்துக்கழகத்தின் திருப்பூர் மண்டல பணிமனை உள்ளது. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து பழனிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பழனி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்து ஒபுளாபுரம் பகுதியில் உள்ள பணிமனை நோக்கி அந்த பஸ் சென்று கொண்டிருந்தது.
பழனி அருகே சேரன்ஜீவாநகர் பகுதியில் வந்தபோது, அந்த பஸ் மீது மர்ம நபர்கள் சரமாரியாக கற்களை வீசிவிட்டு தப்பிஓடினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பஸ் டிரைவர் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
இதேபோல் திருப்பூரில் இருந்து பழனி நோக்கி நேற்று முன்தினம் இரவு 2 அரசு பஸ்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. பழனி அருகே புளியம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, அந்த பஸ்கள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.
இதில் பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து பஸ்களின் டிரைவர்கள், கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ்கள் மீது கல்வீசிய நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து 3 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story