மகளிர் தினவிழா கொண்டாட்டம்


மகளிர் தினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 9 March 2022 9:34 PM IST (Updated: 9 March 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினவிழா கொண்டாட்டப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினவிழா  கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மேயர் ஜெகன்  தலைமை தாங்கினார். ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி மகளிர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சியை மேயர், தொடங்கி வைத்து பார்வையிட்டார். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்கள், மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மீன்வளக் கல்லூரி
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஜே.சி.ஐ இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மண்டல பயிற்சியாளர் ஜிவானா கோல்டி கலந்து கொண்டு பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவியர் பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியர் இரா.ஜெயஷகிலா நடுவராக பணியாற்றினார். மாணவி எஸ்.ஜெயபிரிதா வரவேற்றார். உலக பெண்கள் தினம் குறித்து நான்காம் ஆண்டு டி.மாணவி அருணா பேசினார். முடிவில் மாணவி எஸ்.சுவாதி நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவிகள் சார்பில் முதலாமாண்டு மாணவி டி.உமாமகேஸ்வரி, ஆசிரியைகள் சார்பில் பி.கிறிஸ்சோலைட் ஆகியோர் அதிர்ஷ்டசாலிகளாக தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாணவர் சங்க துணை தலைவர் சா.ஆதித்தன் விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்.
வ.உ.சி கல்லூரி
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் மகளிர் ஆலோசனைக்குழுமம் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு மாணவியருக்கு கோலப்போட்டி, பூ அலங்காரம், சிகை அலங்காரம், மருதாணி, பென்சில் வரைபடம், சமையல், தனித்திறமை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. மகளிர் ஆலோசனைக் குழும பொறுப்பாளர்கள் க.அமுதவல்லி, க.கிருஷ்ணவேணி, ஆர்.மெர்சி லதா, து.ராதிகா, காலெட் ஷர்மிளா ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
முன்னதாக கல்லூரி மகளிர் ஆலோசனைக் குழுமம், கல்லூரியின் ஸ்டிரைடு அமைப்பு, யங் இந்தியா ஆகியவை சார்பில் அரவிந்த் மருத்துவமனையுடன் இணைந்து மகளிருக்கான இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் வீரபாகு முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், பெண் அலுவலர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும், டாக்டர் புளோரா நெல்சன் பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், வீரவிளையாட்டு கலைக்குழுவைச் சார்ந்த சுப்புலெட்சுமி குழுவினர் பெண்களின் பாதுகாப்பு என்ற தலைப்பில் தற்காப்பு கலைகள் குறித்தும், எச்.டி.எப்.சி வங்கி அதிகாரி ஏ.கே.எஸ்.ரமேஷ் பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்தும் பேசினர்.
மரியன்னை கல்லூரி
தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவுக்கு கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, சார்பு நீதிபதி பிரிதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாணவிகளின் நிலைக் காட்சி, குழுப்பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி செயலாளர் புளோரா மேரி, துணை முதல்வர் குழந்தை தெரஸ், சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஜெயராணி, தேர்வாணையர் புனிதா தாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியன் வங்கி
தூத்துக்குடி மேலூர் இந்தியன் வங்கியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கிளை மேலாளர் ஆரோன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வங்கி ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்- மாரியம்மாள் கல்லூரியில் நடந்த விழாவுக்கு, கல்லூரி செயலாளர் எஸ். கண்ணன் தலைமை தாங்கினார். நூலகர் செண்பகா தேவி வரவேற்றார். விழாவில் மாணவிகளின் ஆடல், பாடல், பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தாரணிஜோபு, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமதி ஆகியோர் பேசினர். ஆங்கிலத்துறை தலைமை பேராசிரியர் பிரேமலதா நன்றி கூறினார்.
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவுக்கு, கே.ஆர் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார் கல்லூரி முதல்வர் மதிவண்ணன் தலைமை தாங்கினார். மாணவி பாக்கியலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து மாணவிகளுக்கான பட்டி மன்றம், நடனம், ஆடை அலங்கார அணிவகுப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு பொருட்கள் செய்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஜெயபாக்ய லட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மகளிர் தின ஒருங்கினைப்பாளர் கணிப்பொறியியல்துறை பேராசிரியை கீதாமணி, ஆசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story