தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனார் கைது
வேதாரண்யம் அருகே சொத்துப்பிரச்சினையில் தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். இதில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
வேதாரண்யம்:-
வேதாரண்யம் அருகே சொத்துப்பிரச்சினையில் தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். இதில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
முதல் மனைவியின் மகன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தாமரைப்புலம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 64). இவருக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிபாக விற்பனை கடை தாமரைப்புலம் ஈரவாய்க்கால் பகுதியில் உள்ளது. இவருடைய முதல் மனைவியின் மகன் லட்சுமணன்(40). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
மாரியப்பன் 17 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவிக்கு பணம் கொடுத்து விட்டு காந்திமதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சொத்துப்பிரச்சினை
லட்சுமணனுக்கும், அவருடைய தந்தை மாரியப்பனுக்கும் இடையே சொத்துப்பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மாரியப்பன் வீட்டுக்கு சென்ற லட்சுமணன், தனக்கு பணம் தருமாறு கேட்டு வாக்குவாதம் செய்தார்.
அப்போது மாரியப்பன் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், லட்சுமணனை கடித்து விட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ரூ.1 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
இந்த நிலையில் மாரியப்பனுக்கு சொந்தமான மோட்டார் வாகன உதிரிபாக விற்பனை கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம், தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இதில் கடையில் இருந்த மோட்டார் வாகன உதிரிபாகங்கள், டயர் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மகன் கைது
இதுகுறித்து வேட்டைக்காரணிருப்பு போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் செய்தார். அதில், தனது முதல் மனைவியின் மகன் லட்சுமணன் கடைக்கு தீ வைத்ததாக கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சொத்துப்பிரச்சினை காரணமாக லட்சுமணன் தனது தந்தை மாரியப்பனுக்கு சொந்தமான கடைக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனர். சொத்துப்பிரச்சினையில் தந்தையின் கடைக்கு மகனே தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story