பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில் திருவிழா
பொள்ளாச்சி கடை வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வெள்ளி தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 15-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 22-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் முன் கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் வீடுகளில் இருந்து மஞ்சள் நீர் கொண்டு கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
திருவிழா முடியும் வரை இந்த கம்பத்திற்கு பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வழிபடுவார்கள். கடந்த 1-ந்தேதி கம்பத்தில் கோவில் பூவோடு வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து பூவோடு ஏந்தி கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
5-ந் தேதி காலை 10 மணிக்கு கோவிலில் கொடியேற்று விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு அபிஷேகம் நடைபெற்றது. 9-ந் தேதி காலை 6 மணிக்கு கோவிலுக்கு பக்தர்கள் மா விளக்கு எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வெள்ளித்தேரோட்டம்
இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு வெள்ளித்தேரில் மாரியம்மனும், மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.
மாரியம்மன் மலர் அலங்காரத்தில் மஞ்சள் நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் இருந்து இரவு 8.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முன் செல்ல, பின்னர் வெள்ளித்தேர் புறப்பட்டது.
அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். அம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்டம் மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் இமான்கான் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. இதையொட்டி பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மஞ்சள் நீராடுதல்
2-ம் நாள் தேரோட்டம் 10-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. 11-ந்தேதிஇரவு 7 மணிக்கு 3-ம் நாள் தேரோட்டம் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதை தொடர்ந்து பாரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.
தேர்திருவிழாவையொட்டி நாளை வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 12-ந்தேதி காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ந்தேதி இரவு 8 மணிக்கு மகாஅபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
Related Tags :
Next Story