தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைதிகளின் மனஅழுத்தத்தை போக்க முடியும்
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைதிகளின் மனஅழுத்தத்தை போக்க முடியும் என்று ஆப்கா இயக்குனர் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆப்காவில் ஜெயில் அலுவலர்களுக்கு 2-ம் கட்டமாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு ஆப்கா துணை இயக்குனர் கருப்பணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பியூலா வரவேற்றார்.
இதில், ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கி பேசுகையில், தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் தினந்தோறும் அறிமுகமாகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லண்டன் ஜெயில்களில் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும், சிங்கப்பூரில் ரோபோக்கள் மூலமாகவும் கைதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார்கள்.
தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜெயிலுக்கு வருவோரை திருத்த முடியும். ஜெயில் கைதிகளுக்கு தனிமை உணர்வு ஏற்படாமல் இருக்க வீடியோகால், வீடியோ கான்பரன்சிங் மூலம் குடும்பத்தினர், உறவினர்களிடம் பேச வைக்க வேண்டும். இதன்மூலம் அவர்களின் மனஅழுத்தத்தை போக்க முடியும் என்றார்.
பயிற்சி முகாமில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, அருணாசலபிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்த 40 ஜெயில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story