விழுப்புரம் அருகே பரபரப்பு அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துசென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விழுப்புரம்
கோவில்களில் பணம் கொள்ளை
விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், அங்காளம்மன் கோவில் ஆகியவை உள்ளன. இதில் ஊரின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவிலும், ஊரின் நுழைவுவாயில் அருகே விநாயகர், அங்காளம்மன் கோவில்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மேற்கண்ட 3 கோவில்களிலும் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பூசாரிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், 3 கோவில்களிலும் புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
இதை நேற்று காலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் உடனே இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார், கோவில்களுக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த கோவில்களில் தடயங்களை சேகரித்தனர். 3 கோவில்களிலும் சேர்த்து ரூ.75 ஆயிரம் வரை கொள்ளை போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story