புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு சாராயம் கடத்தி சென்ற போது விபத்தில் சிக்கிய கார் தப்பி சென்ற சிறுவன் கைது
புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக தஞ்சாவூருக்கு சாராயம் கடத்தி சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. அந்த காரை ஓட்டி சென்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் கார் ஒன்று விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடப்பதாக திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது காருக்குள் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று பார்த்தனர். ஆனால், காருக்குள் சாராய கேன்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த கேன்களை கைப்பற்றினர். மொத்தம் 10 கேன்களில தலா 20 லிட்டர் வீதம் 200 லிட்டர் சாராயம் இருந்தது.
பதிவு எண் மூலம் விசாரணை
இதன் மூலம் சாராயம் கடத்தி சென்றவர்கள் தான் விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்றும், போலீசில் சிக்கி கொள்வோம் என்று கருதி காரை அங்கேயே விட்டு விட்டு அதில் வந்தவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து விபத்தில் சிக்கிய கார், சாராய கேன்கள் ஆகியன உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து காரின் பதிவு எண்ணை கொண்டு, மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர்
அந்த கார் தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அதன்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவருக்கு தெரிந்த 17 வயது சிறுவன் தான் காரை எடுத்து சென்றதாக கூறினார்.
இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்த போது, உறவினர் வீட்டு திருமண விழாவுக்காக புதுச்சேரிக்கு காரில் சென்று சாராயம் கடத்தி வந்ததாகவும், அப்போது விபத்தில் சிக்கி கொண்டதாக கூறினான்.
மேலும், போலீசில் சிக்கி கொள்வோம் என்று கருதி காரை அங்குவிட்டு வந்து விட்டதாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான். இதையடுத்து அந்த சிறுவனை போலீசாா் கைது செய்து, செஞ்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் கார், சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story