கபடி போட்டியில் மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு
கரூர் அருகே நடந்த கபடி போட்டியில் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
க.பரமத்தி,
கபடி போட்டியில் கைகலப்பு
கரூர் அருகே விஸ்வநாதபுரியில் கபடி போட்டி கடந்த 2 தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் கடந்த 7-ந் தேதி இரவு நடந்த போட்டியில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ஒரு அணிக்கும், விஸ்வநாதபுரி அருகே உள்ள பள்ளப்பாளையத்தைச் சேர்ந்த அணிக்கும் கபடி போட்டி நடந்தது. இதில் பள்ளப்பாளையத்தை சேர்ந்த அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த விளையாட்டு வீரர்களும், அந்த ஊரைச் சேர்ந்த நபர்களும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அதிக சத்தத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்கி உள்ளனர். இதனால் விஸ்வநாதபுரியை சேர்ந்த கபடி வீரர்களும், கபடி போட்டி நடத்தும் நிர்வாகிகளும் எதிர் அணியைச் சேர்ந்தவர்களை தட்டி கேட்டனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது.
அடித்து விரட்டினர்
இதனையடுத்து பள்ளப்பாளையத்தை சேர்ந்த நபர்களை அங்கிருந்து வெளியே அனுப்பினர். அப்போதும் அந்த வீரர்கள் பெரும் கூச்சலிட்டு இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பிக் கொண்டு சென்றனர். இதனையடுத்து விஸ்வநாதபுரியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் அவர்களை பின் தொடர்ந்து விரட்டினர். இதில் பள்ளப்பாளையத்தை சேர்ந்த வீரர்கள் தங்கள் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு போன் செய்து நமது ஊரைச்சேர்ந்த நபர்களை அடித்து விட்டனர். பின் தொடர்ந்து வருகிறார்கள் எனவே அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அரிவாள் வெட்டு
பின்தொடர்ந்து வந்த நபர்கள் பள்ளப்பாளையம் அருகே வந்தபோது எதிரே பள்ளப்பாளையத்தைச் சேர்ந்த நபர்கள் அரிவாள், கம்பி, உருட்டு கட்டைகளை வைத்திருந்ததை பார்த்து திரும்பி சென்றனர். கடைசியாக இருசக்கர வாகனத்தில் வந்த விசுவநாதபுரியைச் சேர்ந்த பெரியசாமி (வயது32), கலைராஜன் ( 29) ஆகிய இருவரும் மாட்டிக்கொண்டனர். பெரியசாமியை தலை மற்றும் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டினர்.
போலீஸ் பாதுகாப்பு
இதைப் பார்த்து பயந்த கலைராஜன் தப்பி ஓடி விட்டார். படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலைராஜன் கொடுத்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விஸ்வநாதபுரி, பள்ளப்பாளையத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story