கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு கோர்ட்டு தடை விதித்ததால், அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
சென்னை ஐகோர்ட்டு கடந்த 4-ந்தேதி அளித்த தீர்ப்பில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு கால்நடை வளர்ப்போருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைக்கவும், இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கர்னல் ஜான் பென்னிகுயிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார். கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், நாட்டுமாடு நலச்சங்கத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story