8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை


8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை
x
தினத்தந்தி 9 March 2022 11:44 PM IST (Updated: 9 March 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே கீழகூத்தங்குடியில் 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடையை விரைவில் திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்;
திருவாரூர் அருகே கீழகூத்தங்குடியில் 8 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடையை விரைவில் திறக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
ரேஷன் கடை
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் முழுநேர ரேஷன் கடைகள் 579, பகுதி நேர ரேசன் கடைகள் 156 என மொத்தம் 735 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 292 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. 
 திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சியில் கீழகூத்தங்குடி கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், மறைந்த முதல்-அமைச்சருமான கருணாநிதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் ஒதுக்கி புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு தனியாக ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளாக
மேலும் சாய்வுதளம், கழிவறை, கைப்பம்பு வசதி போன்ற அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டது.  இந்த கட்டிடம் பல்வேறு காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து வருகிறது. சாய்வு தளம் சிதைந்தும், கட்டிடத்தின் ஜன்னல், ஷட்டர்கள் துருப்பிடித்து வினாகி வருகிறது. ஆழ்குழாய் பயன்படுத்தப்படாமல் பயனற்று இருக்கிறது. எனவே இந்த ரேஷன் கடை கட்டிடத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் திறக்க கோரிக்கை 
இதுகுறித்து ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார் கூறுகையில், கீழகூத்தங்குடி, அன்னுக்குடி ஆகிய கிராமங்களில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன.  இந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க கூடூர் தான் செல்ல வேண்டும். இதற்காக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இதனையடுத்து கடந்த 2014-15 ஆண்டில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தனது மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வசதிகளுடன் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடை கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story