மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா-கொடியேற்றத்துடன் தொடங்கியது
பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டம் 17-ந்தேதி நடக்கிறது.
பெரம்பலூர்,
மதனகோபாலசுவாமி கோவில்
பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சனமும், மரகதவல்லி தாயார் மற்றும் தாயார் உற்சவமூர்த்திக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தேன், பழவகைகளை கொண்டு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது.
இதையடுத்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபாலசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் வைத்து, கொடிமரத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்ற உற்சவத்தை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில் சென்னை திருமழிசை ஆழ்வார் திருத்தல பட்டாச்சாரியார் திரிவிக்ரமன் குழுவினர் நடத்தி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இரவு ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. முந்தைய தினம் இரவு திருக்கோவில் திட்டத்தின்கீழ் அங்குரார்ப்பணம் (புற்றுமண்) எடுத்துவந்து சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
திருக்கல்யாண உற்சவம்
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) சிம்மவாகனமும், நாளை (சனிக்கிழமை) பல்லக்கு அனுமந்த வாகனமும், 12-ந்தேதி பல்லக்கு சேஷவாகனமும் நடக்கிறது. 13-ந்தேதி உதயகருட சேவையும், வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 14-ந்தேதி பல்லக்கு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் 15-ந்தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும், இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவும் நடக்கிறது. 16-ந்தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது.
தேரோட்டம்
இதையடுத்து, வருகிற 17-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந்தேதி காலை துவாதச ஆராதனமும், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும், 19-ந்தேதி காலைஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னைமர வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கிறது. 20-ந்தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவமும், 21-ந்தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றி விழாவுடன் நிறைவு பெறுகிறது.
இதனைத்தொடர்ந்து 24-ந் தேதி திருத்தேர் 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமும், இரவு பெருமாள் ஏகாந்த சேவையுடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
கொடியேற்ற விழாவில் கோவில் செயல் அலுவலர் அனிதா, தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் கொளக்காநத்தம் ராமச்சந்திரன் அய்யர், பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசமூர்த்தி, பொருளாளர் சஞ்சீவிராவ், எளம்பலூர் சிட்கோ தொழில்கூட்டமைப்பின் இயக்குனர் வேத லட்சுமணராவ், ஜோதிடவியல் நிபுணர் ஸ்ரீராமன் ஆதித்யா, கோவில் முன்னாள் அறங்காவலர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story