மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்


மதுசூதன பெருமாள் கோவிலில்  பங்குனி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 9 March 2022 11:56 PM IST (Updated: 9 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சுசீந்திரம்:
பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 பங்குனி திருவிழா
நாகர்கோவில் பறக்கையில் மதுசூதன பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் குமரியின் குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் தங்க கொடிமரம் உள்ள கோவிலாகும்.
இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணி அளவில் கொடிப்பட்டம் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அதைத்தொடர்ந்து 8.20 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் கொடியேற்றப்பட்டு, கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், தேவசம் கண்காணிப்பாளர் சிவக்குமார், கோவில் ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன், பறக்கை ஊராட்சி மன்ற தலைவி கோசலை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிதம்பரம், திருக்கோவில் நிர்வாகிகள், மதுசூதன சேவா சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
தேரோட்டம்
அதைத்தொடர்ந்து தேர்களுக்கு கால்நாட்டு விழா நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, அலங்கார தீபாராதனை, தோல் பாவைக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.
13-ந் தேதி இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சி அருளும் நிகழ்ச்சியும், 17-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணமும், நடைபெறுகிறது. 18-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டு துறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. 
திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் நிர்வாகம் மற்றும் மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.

Next Story