ரூ.3 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு


ரூ.3 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 10 March 2022 12:05 AM IST (Updated: 10 March 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒன்றியத்துக்கு ரூ.3 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஊராட்சி தலைவர் கூறினார்.

திருவாரூ;
திருவாரூர் ஒன்றியத்துக்கு ரூ.3 கோடியே 41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஊராட்சி தலைவர் கூறினார். 
ஒன்றியக்குழு கூட்டம்
திருவாரூர் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் புலிவலம் தேவா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோாிக்கைகள் குறித்து பேசினர். இதன் விவரம் வருமாறு 
மணிகண்டன்: வடகரை பொது மயான சாலை பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும். சேமங்கலம் நடுத்தெரு சாலையும் சேதமடைந்துள்ளதால் சீரமைக்க வேண்டும். அலிவலத்தில் பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
நடராஜன்: புதுப்பத்தூர் ஊராட்சியில் 4 ஆண்டுகளாக அங்கன்வாடி கட்டிடம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்டித்தர வேண்டும். 
குடிநீர் பிரச்சினை
லலிதா: பின்னவாசல் தெற்கு தெருவில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மிக அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். அண்ணா நகர் சாலையை சீரமைக்க வேண்டும்.
வசந்தா: புதூர் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும். 
தவுலத்: வேலங்குடி பகுதி மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். கல்யாணமகாதேவி பகுதிக்கு சாலை உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றி தர வேண்டும்.
புதிய பாலம்
சிவக்குமார்: கூடூர் ஊராட்சியில் கூத்தங்குடி சாலையில் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த பாலத்தை புதிதாக கட்டித்தர வேண்டும். காட்டாற்றுபாலம் சுடுகாட்டு சாலையை அமைத்து தர வேண்டும். மொசக்குளம் மயானம் செல்லும் மண் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும்.
துணைத்தலைவர்: திருவாரூர் ஒன்றியத்தில் தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று அனைத்து பணிகளை மேற்கொண்டு சிறந்த ஒன்றியமாக திருவாரூர் ஒன்றியத்தை மாற்ற வேண்டும்.
தலைவர்: அரசிடமிருந்து உரிய நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும். இன்னும் ஒரு ஆண்டில் திருவாரூர் ஒன்றியத்தில் சாலை பணிகள் முழுமையாக தன்னிறைவு பெற்ற நிலை உருவாக்கப்படும்.
 ரூ.3 கோடியே 41 லட்சம்
மாவட்ட ஊராட்சி தலைவர்: தமிழகத்தில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி பெண்கள் பதவிகளில் அமர்ந்து உள்ளனர். 
 திருவாரூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பெண்கள் தான் உள்ளனர்.  பெரியார், அண்ணா, கருணாநிதி கண்ட கனவை நனவாக்கியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருவாரூர் ஒன்றியத்திற்கு மாவட்ட ஊராட்சி மூலமாக ரூ.3 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் தீர்மானங்களை வாசித்தார்.

Next Story