உக்ரைனில் சிக்கி தவித்த 13 மருத்துவ மாணவ-மாணவிகள் சொந்த ஊர் திரும்பினர்
உக்ரைனில் சிக்கி தவித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 மருத்துவ மாணவ-மாணவிகள் சொந்த ஊர் திரும்பினர். மேலும் இந்தியாவிலேயே படிப்பை தொடர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
13 மாணவ-மாணவிகள்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு படிக்க சென்ற பெரம்பலூர் மாவட்டம் அரணாரை வடக்கு தெருவை சேர்ந்தவரும், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (எஸ்.பி.சி.ஐ.டி.) போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான முருகானந்தத்தின் மகன் கிருபா சங்கர், சிறுவாச்சூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 13 மாணவ-மாணவிகள் உயிருக்கு பயந்து ஹீரோவ் பிராட்சி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
மேலும் அவர்களது பெற்றோர் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உக்ரைனில் சிக்கி உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று கடந்த 25-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 மாணவ-மாணவிகளும் மத்திய-மாநில அரசுகள் உதவியுடன் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை...
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உக்ரைன்-ரஷிய போரினால் கடந்த சில நாட்களாக நாங்கள் உணவின்றி தவித்தோம். தற்போது மத்திய-மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை காரணமாக விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பி உள்ளோம். நாங்கள் மருத்துவ படிப்பை இந்தியாவிலேயே தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்து தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மங்களமேட்டை சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் கூறுகையில், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் வீடு, நிலத்தை விற்று மகளை உக்ரைனுக்கு அனுப்பினேன். தற்போது போர் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய தனது மகள், மருத்துவ படிப்பை இந்தியாவிலேயே தொடர மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story