ஏ.டி.எம். கார்டுகள் முடக்கப்பட்டதால் உக்ரைனில் பணம் இன்றி உணவுக்கு மிகவும் சிரமப்பட்டோம் தாயகம் திரும்பிய விராலிமலை மாணவர் பேட்டி
ஏ.டி.எம். கார்டுகள் முடக்கப்பட்டதால் உக்ரைனில் பணம் இன்றி உணவுக்கு மிகவும் சிரமப்பட்டோம் என்று தாயகம் திரும்பிய விராலிமலை மாணவர் வேதனையுடன் தெரிவித்தார்.
விராலிமலை:
மருத்துவ மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜாளிப்பட்டி கிராமம் குட்டியப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் செல்வம் (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் மிக்கோலைவ் பகுதியில் உள்ள பெட்ரோ மொகிலா பிளாக் சீ நேஷனல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் படித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் மத்திய அரசு மூலம் சொந்த ஊர் திரும்பினார்.
ஏ.டி.எம்.கார்டுகள் முடக்கம்
உக்ரைன் நாட்டில் நிலவும் போர் நிலவரம் குறித்து நிருபர்களிடம் செல்வம் கூறியதாவது:-
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் நான் படித்த பல்கலைக்கழகம் இருந்த பகுதியில் தாக்குதல் அதிகமாக இருந்தது. மேலும் மற்ற நாடுகளின் ஏ.டி.எம். கார்டுகளை உக்ரைன் அரசு முடக்கியதால் பணம் இன்றி உணவுக்கு மிகவும் சிரமப்பட்டோம். எனது பல்கலைக்கழகத்தில் படிக்கும் 300 மாணவர்களில் 80 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் இருந்த விடுதி அருகே குண்டு வெடிக்கும் சத்தம் அதிகமாக கேட்டுக்கொண்டே இருந்ததால், உயிர் பிழைப்போமா இல்லையா என்ற அச்சத்துடன் நாட்களை கழித்தோம். அதன்பிறகு ஒரு தனியார் ஏஜென்சி மூலம் பணம் செலுத்தியதை அடுத்து அவர்கள் பஸ் மூலமாக அண்டை நாடான மால்டோவா எல்லையில் எங்களை இறக்கிவிட்டனர். அதைதொடர்ந்து அங்கிருந்த மத்திய அரசு குழு மாணவர்களை ருமேனியாவிற்கு அழைத்து வந்தது.
மத்திய அரசு உதவி
அதன்பின்னர் தமிழக அரசு தமிழக மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து மத்திய அரசின் உதவியோடு விமானம் மூலம் கடந்த 6-ந் தேதி டெல்லிக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு குழுவின் மூலம் சிறப்பு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டோம். அங்கிருந்து கார் மூலம் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து செல்வம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி ஆகிய இருவரும் அன்னவாசலில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நாடு திரும்புவதற்கு உதவி புரிந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story