பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கமுதி
கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்பலகாரர் சக்திவேல், மாசி மாத டிரஸ்டி சங்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருக்க தொடங்கினர். பின்னர் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உட்பட ஏராளமான வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். விழாவை முன்னிட்டு கமுதி நகர் முழுவதும் மின் அலங்கார விளக்குகளால் ஜொலிப்புடன் காணப்படுகிறது. வருகிற 22-ந் தேதி பொங்கல் வைத்து வழிபாடு, 23-ந் தேதி அக்னிச்சட்டி, பால்குடம், பூப்பெட்டி, ஆயிரம் கண்பானை, வேல் குத்துதல் உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செய்வர். தமிழகத்தில் எங்கும் இல்லாத வினோதமான சேத்தாண்டி வேஷம் போடும் நேர்த்திக்கடன் இங்கு பக்தர்கள் செலுத்துவர். அதாவது உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு, வேப்பிலையை கையில் வைத்துக் கொண்டு கோவிலை வலம் வருவர். இதனால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். 25-ந் தேதி 2008 திருவிளக்கு பூஜை, 26-ந் தேதி முளைப்பாரி எடுத்தலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளையும் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story