குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நூதனமுறையில் ரூ.2 லட்சம் மோசடி


குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நூதனமுறையில் ரூ.2 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 March 2022 12:40 AM IST (Updated: 10 March 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நூதனமுறையில் ரூ.2 லட்சம் மோசடி செய்த பணத்தை வங்கி கணக்கை முடங்கி போலீசார் மீட்டனர்.

ராமநாதபுரம்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக நூதனமுறையில் ரூ.2 லட்சம் மோசடி செய்த பணத்தை வங்கி கணக்கை முடங்கி போலீசார் மீட்டனர்.
ரூ.2 லட்சம் முதலீடு
பரமக்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி சுபாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காமேஷ்முருகன்(வயது 24). பொறியியல் பட்டதாரியான இவர் யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவேற்றம் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் கூகுள் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பார்த்து அதனை பதிவிறக்கம் செய்து சிறிய அளவில் முதலீடு செய்துள்ளார். இதற்கு உடனடியாக பணம் வந்ததால் தொடர்ந்து முதலீடு செய்து வந்த காமேஷ்முருகன் ஒரு கட்டத்தில் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். 
இதற்கான 5 சதவீதம் வரை வட்டித்தொகை அந்த செயலியில் வந்த நிலையில் அதனை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் தவித்துள்ளார். 2 மாத காலம் போராடி பார்த்தும் லாபத்தை எடுக்க முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த காமேஷ்முருகன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.  இதுகுறித்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி காமேஷ்முருகன் செலுத்திய வங்கி கணக்கினை முடக்கி வைத்தனர். 
பணம் மீட்பு
இதனால் அந்த வங்கி கணக்கிற்குரிய பண பரிமாற்ற நிறுவனத்தினர், போலீசாரை தொடர்பு கொண்டு வங்கி கணக்கு முடக்கி வைத்துள்ளதற்கான காரணத்தை கேட்டனர். போலீசார் இந்த மோசடி குறித்து தெரிவித்தபோது அந்த பணபரிமாற்ற நிறுவனத்தினர் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு செலுத்துவதற்காக வந்துள்ள தொகை என தெரிவித்தனர்.
மோசடி செய்த பணம் என்று தெரிவித்ததும் பணபரிமாற்ற நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட தனியார் மோசடி நிறுவனத்திற்கு பணத்தினை அனுப்பாமல் காமேஷ்முருகனின் வங்கி கணக்கிற்கு பணத்தினை மாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பணம் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை ராமநாதபுரம் சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், காமேஷ்முருகனிடம் வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் திபாகர், ரிச்சர்ட்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story