மாடுகளை ஏற்றிச்சென்ற மினிலாரி தடுத்து நிறுத்தம்
விருத்தாசலத்தில் மாடுகளை ஏற்றிச்சென்ற மினிலாரியை பா.ஜ.க. பிரமுகர் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து முஸ்லிம்கள், பா.ஜ.க.வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை செய்பவர். இவர் நேற்று காலை திட்டக்குடி மாட்டு சந்தைக்கு சென்று, அங்கு 7 மாடுகளை வாங்கி ஒரு மினி லாரியில் ஏற்றி எம்.அகரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
விருத்தாசலம் கடைவீதி வழியாக சென்ற போது, அவர் ஓட்டி வந்த மினி லாரியை தடுத்து நிறுத்திய பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்துவதற்காக கொண்டு செல்கிறீர்களா? என கேட்டு பழனி மற்றும் அவருடன் வந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மாடுகளை கோ சாலைக்கு அல்லது கோவிலுக்கு கொண்டு சென்று விடுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து அறிந்த மனிதநேய மக்கள் கட்சி காதர் ஷரிப், எஸ்.டி.பி.ஐ. முகமது ரபிக் மற்றும் முஸ்லிம்கள் அங்கு திரண்டு வந்தனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்து மாடு வியாபாரி பழனியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பழனி அங்கு நடந்ததை போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து மேல் விசாரணை செய்வதற்காக மாடுகளுடன் மினிலாரியைவிருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். இதனிடையே பா.ஜ.க. பிரமுகருக்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், பழனிக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story