கிராம ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.2½ கோடி ஒதுக்கீடு
கிராம ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தெரிவித்தார்.
திருப்பத்தூர்
கிராம ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.2½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தெரிவித்தார்.
மாவட்ட ஊராட்சி கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் மு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், ஆழப்படுத்துதல், புதிய மின் மோட்டார், பைப்லைன் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பள்ளி கழிப்பறை, சமுதாய கழிப்பறை, அங்கன்வாடி கழிப்பறை, கழிவுநீர் கால்வாய் அமைக்க ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. செய்ய வேண்டிய பணிகள் குறித்து தாங்கள் ஏற்கனவே கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் டெண்டர் வைக்கப்பட்டு பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
2021-22, 2023-24-ம் ஆண்டு பணிகள் செய்ய ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டிய பணிகள் குறித்து உடனடியாக எழுதிக்கொடுத்தால் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு அடுத்த ஆண்டிற்கான பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும்.
மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகம் கட்ட ரூ.3 கோடி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது:-
அதிக நிதி ஒதுக்க வேண்டும்
சுபாஷ் சந்திரபோஸ் (வி.சி.க): எனது கிராம ஊராட்சி ஆண்டியப்பனூர் பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
கவிதா தண்டபாணி (தி.மு.க.):
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிக குறைவாக உள்ளது. குறைந்தபட்சம ரூ.25 லட்சம் ஒதுக்க வேண்டும்.
தலைவர்: மாவட்ட ஊராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடையாது. வரும் நிதி ஆண்டில் வரும் நிதி அடுத்த முறை அதிக அளவில் பிரித்துக் கொடுக்கப்படும்.
சரிதா (தி.மு.க.): ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர்கள் அழைக்கப்படுவதில்லை, அரசு டாஸ்மார்க் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: ஏற்கனவே அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கவுன்சிலர்களை அழைத்து விழா நடத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற நடக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மார்க் புகார் தொடர்பாக கலால் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்.
சுப்பிரமணி (தி.மு.க.): கிராம ஊராட்சிகளில் செய்யப்படும் பணிகளுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர்களிடம், மாவட்ட கவுன்சிலர்கள் கையெழுத்து பெற வேண்டும் என கூறுகிறார்கள். துணைத்தலைவர் கையெழுத்து போட ரூ.5 ஆயிரம் கேட்கிறார். மாவட்ட கவுன்சிலர்களுக்கும் 100 நாள் வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
குணசேகரன் (தி.மு.க.): ஒப்பந்ததாரர்கள் செய்த பணிக்கு பணம் வழங்கவில்லை. பணம் கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் ஒப்பந்ததாரர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பிச்சாண்டி (செயலாளர்): பணி செய்ய உத்தரவிட்டு 2, 3 ஆண்டுகள் கழித்து பணி செய்தால் அந்த பணிக்கு ஒதுக்கப்பட்ட பட்ட பணம் வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டு விடுகிறது. பணிகளை கொடுத்த உடனேயே செய்தால் உடனடியாக பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Related Tags :
Next Story