சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா


சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 10 March 2022 1:26 AM IST (Updated: 10 March 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர், 

கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் காலை 10 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சூரியபிரபை வாகனத்திலும், இரவில் சந்திர பிரபை வாகனத்திலும் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

17-ந் தேதி தேர் திருவிழா

மேலும் இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரை மயில், காமதேனு, பல்லக்கு, புதிய வெள்ளி மயில், விமானம், நாக வாகனம், ரிஷப வாகனம், ஆட்டுக்கிடா, இடும்ப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) காலை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 18-ந் தேதி பங்குனி உத்திர 108 சங்கு பூஜை அபிஷேகமும், இரவு கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் புதுப்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலிலும், கூத்தப்பாக்கத்தில் உள்ள முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்கியது.

Next Story