கர்நாடகத்தில் வீடுகளுக்கே சாதி-வருமான சான்று அனுப்பி வைக்கும் திட்டம்-மந்திரி ஆர்.அசோக்


கர்நாடகத்தில் வீடுகளுக்கே சாதி-வருமான சான்று  அனுப்பி வைக்கும் திட்டம்-மந்திரி ஆர்.அசோக்
x
தினத்தந்தி 10 March 2022 1:41 AM IST (Updated: 10 March 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

43 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சாதி-வருமான சான்றிதழ்கள் அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக மேல்-சபையில் மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்

பெங்களூரு: 43 லட்சம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சாதி-வருமான சான்றிதழ்கள் அனுப்பி வைக்கும் திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வருகிற 12-ந் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக மேல்-சபையில் மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
கர்நாடக மேல்-சபையில் ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் கோவிந்தராஜ் கேட்ட கேள்விக்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-

சாதி-வருமான சான்று

வருவாய்த்துறையில் நிலப்பட்டா கட்டணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.173 கோடி வசூலாகியுள்ளது. வருவாய்த்துறையில் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கும் திட்டம் இல்லை. வருவாய்த்துறையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 4 சேவைகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது உண்மை.
இது எங்களுக்கு தெரியாது. 

சமீபத்தில் கலபுரகி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். அப்போது வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் இந்த தகவலை கூறினார். அதை பின்பற்றி மாநிலம் முழுவதும் வருவாய் ஆவணங்களை பொதுமக்களுக்கு இலவசமாக விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வருகிற 12-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மாநிலத்தில் 43 லட்சம் பேருக்கு சாதி-வருமான சான்று மற்றும் பட்டா ஆவணங்களை அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

800 சர்வேயர்கள்

மாநிலம் முழுவதும் 719 அடல் மக்கள் தொடர்பு மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு நில ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. சர்வே பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டு 1 லட்சம் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இந்த பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 800 சர்வேயர்களை நியமனம் செய்துள்ளோம். மேலும் 800 சர்வேயர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் தங்களின் நிலம் குறித்த வரைபடத்தை தயாரிக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதை பதிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் நிலம் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story