மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த விழா தொடங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாத கோடை வசந்த விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்மன் தினமும் ஊஞ்சலில் எழுந்தருள்கிறார்கள்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாத கோடை வசந்த விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி, அம்மன் தினமும் ஊஞ்சலில் எழுந்தருள்கிறார்கள்.
கோடை வசந்த விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடை பெறும். இதில் தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் கோடை வசந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மாலையில் கோவிலில் இருந்து புறப்பாடாகி சித்திரை வீதி வழியாக தெற்கு சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பல பள்ளியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார்கள்.
அங்கு சுவாமியும் அம்மனும் ஊஞ்சல் ஆடி சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழா நடைபெறுவதையொட்டி கோவில் மற்றும் உபயதாரர்கள் சார்பாக மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்
செல்லூர் திருவாப்புடையார் கோவில்
விழாவின் முக்கிய நிகழ்வாக பங்குனி உத்திர தினமான வருகிற 18-ந் தேதி அன்று, மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை 10 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு வைகை வடகரையில் உள்ள செல்லூர் திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருள்வார்கள். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறும்.
அதை தொடர்ந்து சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலை வந்தடைவர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story