சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா


சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா
x
தினத்தந்தி 10 March 2022 1:58 AM IST (Updated: 10 March 2022 1:58 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

கும்பகோணம்:
கும்பகோணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
பங்குனி உத்திர விழா 
கும்பகோணம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 3 சிவன் கோவில்களில் பங்குனி உத்திர விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த சிவன் கோவில்களில் இந்த ஆண்டும் பங்குனி உத்திர விழா நேற்று காலை அந்தந்த கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது 3 சிவன் கோவில்களிலும் உள்ள உற்சவ பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, விழா கொடியேற்றம் நடைபெற்றது.
 இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 3 சிவன் கோவில்களிலும் நேற்று இரவு சாமி வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
தேரோட்டம் 
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி ஓலை சப்பரமும், 15-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 17-ந் தேதி தேரோட்டமும், 18-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவன்று மகாமகம் குளத்தில் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாத சாமி கோவில்களின் சார்பில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதேபோல் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலின் தீர்த்தவாரி காவிரி ஆற்றங்கரையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story