2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது
மல்லூரில் 2 வீடுகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருட்டு நகையை பதுக்கியவரும் சிக்கினார்.
பனமரத்துப்பட்டி:-
மல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 42), தையல் தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரம் திடீரென சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒடி உள்ளார். இதையடுத்து ஜெயந்தி வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் மல்லூரில் வீரபாண்டி ரோட்டில் வசித்து வரும் என்ஜினீயர் சத்யராஜின் (24) வீட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி மடிக்கணினி, செல்போன் ஆகியவை காணாமல் போனது. இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்தும் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், மல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மணி என்பவர் மகன் அருண்குமார் (24) இந்த 2 வீடுகளில் திருடியது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் செயின், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் திருட்டு நகையை பதுக்கி வைத்திருந்ததாக சந்தியூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story