பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது
வாழப்பாடி அருகே பிரபல கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாழப்பாடி:-
வாழப்பாடி அடுத்த கோலாத்துக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). இவர் கடந்த 2-ந் தேதி பேளூர் பகுதியில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது நிறுத்திய இடத்தில் மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டனர். இதில், ஏற்காடு பகுதியை சேர்ந்த கருணாகரன் என்ற ரமேஷ் (39), மற்றும் அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த விஜி (24) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வாழப்பாடி அருகே குறிச்சி கிராமத்தை சேர்ந்தவரும், சேலம் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவருமான மணிகண்டனின் வீட்டில் கடந்த 1-ந் தேதி பூட்டை உடைத்து அங்கிருந்த 5½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரிடம் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிள், நகை, வீட்டு பத்திரம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர். மேலும் திருட பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வாழப்பாடி போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்வதற்கு எடுத்து சென்றதாக அவர்கள் இருவரும் நகைச்சுவையாக கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இருவரும் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜி மற்றும் கருணாகரன் என்ற ரமேஷை போலீசார் கோர்ட்டில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். கருணாகரன் மீது சேலத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story