வெள்ளி கொலுசு தொழிலுக்கு பன்மாடி கட்டிடம் அமைக்க இடம் தேர்வு


வெள்ளி கொலுசு தொழிலுக்கு பன்மாடி கட்டிடம் அமைக்க இடம் தேர்வு
x
தினத்தந்தி 10 March 2022 2:43 AM IST (Updated: 10 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பழைய சூரமங்கலத்தில் வெள்ளி கொலுசு தொழிலுக்கு பன்மாடி கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்:-
சேலம் பழைய சூரமங்கலத்தில் வெள்ளி கொலுசு தொழிலுக்கு பன்மாடி கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
வெள்ளி கொலுசு
சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. வெள்ளி கட்டியில் இருந்து கொலுசாக மாற்றம் செய்வதற்கு 30 இடங்களுக்கு சென்றால் மட்டுமே வெள்ளி கொலுசானது முழு வடிவம் பெறுகிறது. 
மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், ஒரே இடத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்யவும், அதனை சர்வதேச அளவிற்கு சந்தைப்படுத்தவும் தனி ஏற்பாடு செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தி மற்றும் கைவினை சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆய்வுக்கூட்டம்
இந்தநிலையில், சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்களின் வசதிக்காக தனி பன்மாடி கட்டிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து புதிய கட்டிடம் அமைக்க பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
இதனிடையே, வெள்ளி கொலுசு உற்பத்திக்கு தனி பன்மாடி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி தலைமையிலும், மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையிலும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. 
இதில், மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் தேவேந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கட்டிடத்திற்கு இடம் தேர்வு
இக்கூட்டத்தில் பழைய சூரமங்கலம் பகுதியில் வெள்ளி கொலுசு தொழிலுக்கு பன்மாடி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளி கொலுசு பட்டறைகளை சிறு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி ஆய்வு செய்தார். 
பனங்காடு, சிவதாபுரம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொலுசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, கொலுசு உற்பத்தி முறைகள், தொழிலாளர்களுக்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

Next Story