அடகுகடையின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் அடகு கடையின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
மலைக்கோட்டை
திருச்சி வயலூர் சாலை அம்மையப்பபிள்ளை நகர் அருகே உள்ள ஆனந்தம் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 36). இவருடைய தம்பி ஸ்ரீராம் (32). இருவரும் திருச்சி மலைக்கோட்டை நடுகுஜிலி தெருவில் நிதி நிறுவனத்துடன், நகை அடகுக்கடையும் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்றுகாலை அவர்கள் நிறுவனத்தை திறக்க வந்தபோது, கடையின் இரும்பு ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த இரு பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தன.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 22 கிராம் தங்க நகைகள், 150 கிராம் வெள்ளி நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டதோடு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story