கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது


கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2022 3:03 AM IST (Updated: 10 March 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.

பெருந்துறை
விஜயமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் ஆர்த்தி (வயது 19). இவர் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோட்டில் ஆர்த்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென்று ஆர்த்தி வைத்திருந்த 2 செல்போன்களை பறித்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். அவர்கள் சென்ற ரோட்டை அறிந்து கொண்ட ஆர்த்தி, அக்கம் பக்கத்தினரிடம் இருந்து செல்போனை வாங்கி, அந்த ரோட்டில் உள்ள தன்னுடைய உறவினர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். அவருடைய உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வழிப்பறி கொள்ளையர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஆர்த்தி கூறிய  அடையாளத்துடன் மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்ததை கண்டனர்.  உடனே அவர்கள் 3 பேரையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி பிடித்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன் மகன் பிரகாஷ் (22), திருப்பூர் மண்ணரையை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்தி (21), நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த தனசேகரன் (29) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஆர்த்தியிடம் இருந்து செல்போனை பறித்து சென்றதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story