கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் தி.மு.க.-அதி.மு.க.உறுப்பினர்கள் கூட்டாக வெளிநடப்பு
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் திமுக,அதிமுக உறுப்பினர்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டத்தில் புதிய ஒப்பந்ததாரர்களை பதிவு செய்ய தலைவர் மறுப்பு தெரிவித்ததால், தி.மு.க., அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
யூனியன்குழு கூட்டம்
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் குழு கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்துப்பாண்டி, பொறியாளர்கள் சங்கர சுப்பிரமணியன், மேரி, படிபீவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில் துணை தலைவர் பழனிச்சாமி, தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதிய ஒப்பந்ததாரர்களுக்கு தடை
கூட்டம் தொடங்கியவுடன், தலைவர் பேசுகையில், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு சொந்தமான 5.52 சென்ட் நிலம் மந்தித்தோப்பு சாலையில் பாண்டவர் மங்கலம் ஊராட்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு முதல்-அமைச்சரின் அறிவுரைப்படி காய்கறி சந்தை, ஆட்டுச்சந்தை அமைக்க ஏற்பாடு செய்து, பஞ்சாயத்து யூனியனுக்கு வருமானம் ஈட்டித்தரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ள இடத்தில் செம்மரம், தேக்கு மரங்கள் வைத்து அதனை சுற்றி வேலி அமைத்து அந்த நிலம் பாதுகாக்கப்படும்.
தற்போது ஒப்பந்ததாரர்கள் 56 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கே பணி சரியாக வழங்க முடியவில்லை. தற்போது இன்னும் 10 முதல் 15 பேர் வரை புதிதாக பதிவு செய்ய விண்ணப்பம் வழங்கி உள்ளனர். இவர்களையும் இணைத்தால் 71 பேர் வரை ஒப்பந்ததாரர்கள் எண்ணிக்கை உயர்ந்துவிடும். இவர்கள் அனைவருக்கும் பணி கொடுக்க இயலாது. எனவே, குறைந்தது 6 மாதங்கள் வரை யாரையும் புதிதாக ஒப்பந்ததாரராக பதிவு செய்ய தடை விதிக்க மன்றம் அங்கீகரிக்க வேண்டும், என்றார்.
தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டாக வெளிநடப்பு
அப்போது உறுப்பினர்கள் புதிதாக விண்ணப்பித் துள்ளவர்களில் குறிப்பிட்ட 2 பேரின் மனுக்களை ஏற்று, அவர்களை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு யூனியன் தலைவர் மறுக்கவே, தி.மு.க., ்அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மீதமுள்ள 6 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர். இதனால், போதிய உறுப்பினர்கள் இல்லாமல் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.
Related Tags :
Next Story