ஆசிரியர்கள் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவன்
ஆசிரியர்கள் திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவன், தனது சாவுக்கு ஆசிரியர்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையை அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவன், 3 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் விளையாடும் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவன், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சென்று வருகிறார். காலில் அடிபட்டு உள்ளதால் சரிவர நடக்க முடியாததால் பள்ளிக்கு தாமதமாக சென்று வந்ததாக தெரிகிறது.
இதனால் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர், சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவன், வீட்டில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தனது சாவுக்கு ஆசிரியர்கள்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story