பழனி கோட்ட அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சங்க கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பழனி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது
பழனி:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பழனி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. கூட்டமைப்பு அமைப்பாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ஜெயபால், திண்டுக்கல் கோட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின்போது, சாலைகளின் நீளத்துக்கு ஏற்ப திண்டுக்கல், பழனி கோட்டத்தில் சாலை ஆய்வாளர், பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து சங்கங்களையும் அழைத்து காலாண்டு குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் சிலிண்டர், அடுப்பு கொண்டு வந்து அங்கேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டனர்.
இதற்கிடையே அனுமதி இன்றி சிலர் வீடியோ எடுத்ததாக கூறி அவர்கள் போலீசாரிடம் முறையிட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைப்பாளர் ராஜமாணிக்கம் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். எங்கள் குடும்பத்தினரும் போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story