நஞ்சை தரிசு நிலத்தில் பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்: வேளாண்மை இணை இயக்குனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க நஞ்சை தரிசில் பயறு வகைகளை சாகுபடி செய்யலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க நஞ்சை தரிசில் பயறு வகைகளை சாகுபடி செய்யலாம் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெற்பயிர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாசனப் பகுதிகளான கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் கிணற்று பாசனப்பகுதியில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பிசான நெற்பயிர் சாகுபடி முடிவடையும் தருவாயில் உள்ளது. விவசாயிகள் தற்போது உள்ள நிலத்தில் ஈரப்பதத்தை பயன்படுத்தி நெற் பயிருக்குப்பின் பயறு வகைகளான உளுந்துப்பயிர் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். நெல் தரிசில் உளுந்துப்பயிர் சாகுபடி செய்வதால், பயிர் சுழற்சியின் காரணமாகவும், பயறுவகைப் பயிர்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை வேர் முடிச்சுக்கள் மூலம் பயிருக்கு வழங்குவதால் நிலத்தின் வளம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
உரம்
வரும் பருவத்தில் சாகுபடி செய்யும் எந்த ஒரு பயிருக்கும் தழைச்சத்தின் தேவையான அளவு குறைவதோடு மண்ணில் கரிமநிலை அளவு அதிகரிக்கிறது. நெல்தரிசில் உளுந்து சாகுபடி செய்வதற்கேற்ற ரகங்களான வம்பன் 6, வம்பன் 8 மற்றும் வம்பம் 10 ஆகும். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகளை, ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்து, வரிசை முறையில் விதைப்பு செய்ய வேண்டும். பூக்கும் தருணத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி கரைசல் தயார் செய்திட 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 20 லிட்டர் தண்ணீர் கலந்து மறுநாள் கரைசலை வடிகட்டி அதனுடன் 180 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து 15 தின இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும் அல்லது 19:19:19 நீரில் கரையும் உரத்தை 1 சத கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் 19:19:19 உரம்) கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
விதைகள்
எனவே விவசாயிகள் தவறாது நிலத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி நெல் அறுவடைக்கு முன் உளுந்துப் பயிர் விதைகளை வயலில் விதைத்து 60-70 நாட்களுக்குள் நல்ல மகசூல் பெறலாம். மேலும் இப்பயிர் சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற தரமான உளுந்து விதைகள் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, சாத்தான்குளம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் மனிதருக்கு தேவையான புரதம் உட்பட முக்கியமான சத்துக்களை அளிப்பதுடன் மண் வளத்தையும் பேணி காத்திடுவதால் அனைத்து விவசாயிகளும் நெல்தரிசில் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story