தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 March 2022 8:23 PM IST (Updated: 10 March 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள் என்று கடையத்தை சேர்ந்த திருக்குமரன் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக மின்விளக்கு சரிசெய்யப்பட்டு, தற்போது மின்விளக்கு ஒளிர்கிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பழுதடைந்த அடிபம்பு 

நெல்லை மாவட்டம் மேலச்செவல் ரஸ்தா வடக்கு தெருவில் அடிபம்பு உள்ளது. இந்த அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த அடிபம்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
மீனாட்சி சுந்தரம், மேலச்செவல்.

பெயர்ந்து கிடக்கும் சாலை

பாளையங்கோட்டை செங்குளம் கிராமம் கீழஓமநல்லூர்-பொன்னக்குடி வரை சாலை சமீபத்தில் போடப்பட்டது. இந்த சாலை கீழ ஓமநல்லூர் பஸ் நிறுத்தம் அருகில் தற்போது பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
தேவராஜ், ஓமநல்லூர்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? 

சிவந்திபுரம் ஊராட்சி சக்திநகர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் தாகம் தீர்த்து வந்தது. தற்போது, இந்த நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும், தூண்களில் ஆங்காங்கே விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வம், சிவந்திபுரம்.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும் 

புளியங்குடியில் இருந்து திருவேட்டநல்லூர் வழியாக சங்கரன்கோவிலுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் பயணம் செய்கிறார்கள். மாலையில் பள்ளி முடிவடையும் நேரத்தில் புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கிறார்கள். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி விடும் நேரத்தில் கூடுதலாக அரசு டவுன் பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜ்குமார், புளியங்குடி.

கருவேலம் செடிகள் அகற்றப்படுமா? 

தூத்துக்குடி 13-வது வார்டு தனசேகரன் நகர் 5-வது தெரு மேற்கு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதை சுற்றி எருக்கலை செடிகள், கருவேலம் செடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. மேலும் விஷஜந்துகள், பன்றிகளால் தொந்தரவும் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்குள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுமதி, தனசேகரன்நகர்.

தாகம் தீர்க்காத அடிபம்பு

திருச்செந்தூர் வட்டாரம் பள்ளிப்பத்து கிராமம் மேலபள்ளிப்பத்து பிள்ளையார் கோவில் தெரு முன்பு அடிபம்பு உள்ளது. இந்த அடிபம்பு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து பொது மக்களின் தாகம் தீர்க்காமல் உள்ளது. இந்த அடிபம்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன்.
வனராஜா, திருச்செந்தூர்.

Next Story