வேலூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து பீடித் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. பீடி தொழிலாளர் சங்க தலைவர் காத்தவராயன், ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன மாநில தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், எல்.பி.எப். தொழிற் சங்க மாவட்ட செயலாளர் கலைநேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். வேலூர் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்க செயலாளர் (சி.ஐ.டி.யு.) நாகேந்திரன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பீடி தொழிலை நலிவடைய செய்யும் பீடி மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கையால் வேலை இழக்கும் பீடி தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29-ந் தேதி பொது வேலை நிறுத்தத்தில் பீடி தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தேவதாஸ், சிம்புதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story