‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 March 2022 8:39 PM IST (Updated: 10 March 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை சீரமைக்கப்பட்டது

சென்னை தண்டையார் பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள சாலை பல மாதங்களாக சேதமடைந்து இருப்பது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த உடனடி நடவடிக்கையால் அப்பகுதியில் சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மகிழ்ந்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்ட மாநகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பாராட்டை தெரிவித்தனர்.



புதிய மின்கம்பம் கிடைத்தது

செங்கல்பட்டு மாவட்டம் பேரமனூர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள மின்கம்பம் சிமெண்ட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. மின்வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் பழுதடைந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் வைக்கப்பட்டு உள்ளது.

உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய ஊழியர்களுக்கும், அதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.



தூர்வாரப்படாத கால்வாய்

சென்னை வியாசர்பாடி சர்மா நகர், பாரதி நகர் கிழக்கு குறுக்குத் தெருவில் உள்ள கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயினை முறையாக சுத்தம் செய்து தர வேண்டும்.

- பொது மக்கள், சர்மா நகர்.

பஸ் வசதி இல்லை

சென்னை பெரம்பூரில் இருந்து அசீஸ் நகர் வரை, அலெக்ஸ் நகர் வழியாக 3 மின் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது இந்த வழித்தடத்தில் ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அலெக்ஸ் நகர் செல்லும் பயணிகள் போதிய பஸ் வசதி இல்லாமல் அதிக நேரம் பஸ் நிறுத்தத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்கள் நலன் கருதி பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்குமா?

- பொதுமக்கள், அலெக்ஸ் நகர்.

திறந்த நிலையில் வடிகால்வாய்

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள வடிகால்வாய் மூடியில்லாமல் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். தவறி விழும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

- சீனிவாசன், அடையாறு.



விபரீதம் தடுக்கப்படுமா?

சென்னை மாத்தூர் மணலி எம்.எம்.டி.ஏ. முதல் பிரதான சாலை 23-வது தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் வயர்கள் அறுந்து விழும் அபாயம் இருப்பதால் மின் வாரிய அதிகாரிகள் கவனித்து விபரீதம் எதுவும் ஏற்படும் முன்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- அஜய், மாத்தூர்.

பூங்கா திறக்க நடவடிக்கை தேவை

சென்னை கீழ் அயனம்பாக்கம் கேலக்ஸி தெருவில் உள்ள பூங்கா சில காரணங்களால் கடந்த சில நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. அந்த பூங்காவில் தினசரி தேகப்பயிற்சி செய்பவர்களுக்கும், பெண்கள், முதியோர் என தினமும் நடைபயிற்சி செய்பவர்களுக்கும் இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. எனவே பூங்காவை உடனே திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

- மனோகரன், வானகரம்.

ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் இந்திரா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடையானது ஆபத்தான நிலையில் சாலையில் இருந்து 1½ அடி அளவுக்கு மேல் தெரியும் படியாக அமைந்திருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலை வழியே மோட்டார் சைக்கிளிலில் வரும் வாகன ஓட்டிகள் அதில் தட்டி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் கார் போன்ற வாகனங்களும் அதில் இடித்துக் கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விபத்து எதுவும் ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுப்பார்களா?

- சுதர்சன், சேலையூர்.



குப்பைகள் அடைத்த கால்வாய்

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், பேட்டை தெருவில் உள்ள கால்வாயில் கழிவுநீர் போக வழியில்லாமல் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்குவதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்.

- சங்கர், பெருங்களத்தூர்.

பஸ் நிறுத்த பெயர் பலகை வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள காமராஜபுரம் பஸ் நிறுத்தத்திலும் அதன் எதிர்புறம் அமைந்துள்ள செம்பாக்கம் பஸ் நிறுத்தத்திலும் ஊர் பெயர், எந்தெந்த பஸ் இங்கு நிற்கும் என்பது குறித்த அட்டவணையுடன் கூடிய பெயர் பலகை இல்லாத காரணத்தினால் பஸ் ஏற வரும் பயணிகளும், பொதுமக்களும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக அந்தந்த பஸ் நிறுத்தத்தில் பெயர் பலகை அமைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களின் இன்னலை போக்கி தர வேண்டும்.

- பூபாலன், சமூக ஆர்வலர்.




Next Story