ஊட்டியில் குடிநீர் ஏடிஎம் எந்திரங்கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி


ஊட்டியில் குடிநீர் ஏடிஎம் எந்திரங்கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 10 March 2022 8:50 PM IST (Updated: 10 March 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்

ஊட்டி

ஊட்டியில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

குடிநீர் பாட்டில்களுக்கு தடை

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் கடைகளில் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை கடந்த 2½ ஆண்டுகளாக அமலில் உள்ளது. 

அதன்படி 5 லிட்டர் கொள்ளளவுக்கு கீழ் குடிநீர் பாட்டில்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பொருத்தி செயல்படுத்தபட்டது.

செயல்படுவது இல்லை

அதில் ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் 200 மில்லி லிட்டர், 2 ரூபாய் போட்டால் 400 மில்லி லிட்டர், ரூ.5 செலுத்தினால் 1 லிட்டர் குடிநீர் பிடித்து கொள்ளலாம். மேலும் அங்கேயே தண்ணீர் குடிக்க டம்ளர் பொருத்தப்பட்டது.

 கொரோனா பாதிப்புக்கு பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். சுற்றுலா தலங்கள் முன்பு உள்ள குடிநீர் ஏ.டி.எம்.கள் பல மாதங்களாக செயல்படாமல் கிடக்கிறது.

 நாணயம் செலுத்தும் பகுதி இயங்காமல் இருக்கிறது. பகலில் வெயில் அதிகமாக உள்ளது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் எந்திரங்களில் குடிநீர் கிடைக்காததால் அவதி அடைந்து உள்ளனர். 

பராமரிக்க வேண்டும்

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ஊட்டியில் உள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை இல்லை. குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீர் வருவது இல்லை.

 இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் எந்திரங்களை பராமரிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சீதோஷ்ண காலநிலைக்கு ஏற்ப குடி நீர் ஏ.டி.எம். எந்திரங்களில் சூடான தண்ணீர் வினியோகிப்பது, தடிமனான ஒரு லிட்டர் பாட்டிலில் குடிநீர் பிடித்து குடிப்பது போன்ற மாற்றங்கள் செய்து வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் கோடை சீசனை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப் பட்டு வருகிறது என்றனர்.


Next Story