கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு


கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 March 2022 8:50 PM IST (Updated: 10 March 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பச்சை  தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. 

தேயிலை சாகுபடி

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப் பட்டு இருக்கிறது. வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கோத்தகிரி பகுதியில் உறைபனி பொழிவு காணப்படும். 

இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் கொழுந்துகள் கருகி பசுந் தேயிலை சாகுபடி பாதிக்கப்படும். இதனால் பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியும், சருகுகளை செடிகளின் மேல் பரப்பியும் பாதுகாப்பது வழக்கம். 

மகசூல் அதிகரிப்பு

மேலும் ஒரு சில விவசாயிகள் பனிக்காலத்தில் தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்வதும் உண்டு. ஆனால் நடப்பாண்டில் கோத்தகிரி பகுதியில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. மேலும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதுமான மழைபெய்தது. 

இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன், போதிய சூரிய வெளிச்சத்துடன், இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகளில் அரும்புகள் துளிர்விட்டு வளர்ந்து, பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

இது குறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:-

சீதோஷ்ணநிலை

கோத்தகிரி பகுதியில் தற்போது லேசான வெயிலுடன் சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கிறது. இந்த காலநிலை தேயிலை உற்பத்திக்கு நன்றாக இருக்கும். இதனால் தேயிலை செடிகளில் கொழுந்துகள் நன்றாக வளர்ந்து விளைச்சல் அதிகமாக இருக்கிறது. 

இதன் காரணமாக தேயிலை எஸ்டேட் பகுதியில் திரும்பிய இடங்களில் எல்லாம் பச்சை பசேலென தேயிலை செடிகள் காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை செடிகளின் அருகில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story