கைதான 5 இலங்கை மீனவர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் வியாழக்கிழமை மாலையில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்
தூத்துக்குடி:
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேரும் நேற்று மாலையில் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ரோந்து
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று முன்தினம் அதிகாலையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டு இருந்த ஒரு மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர்.
கைது
உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அந்த படகில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த ஜூட் சம்பத் பெர்னாண்டோ (வயது 41), வர்ணகுல சூரிய வொர்பெட் கின்ஸ்லி பெர்னாண்டோ (41), ரணில் இந்திகா (37), யுவான் பிரான்சிஸ் சுனில் பிஹாரேரு (55), அசங்கா ஆண்டன் (40) ஆகிய 5 பேர் இருந்தனர். அவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை கடலோர காவல்படையினர் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர். தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் வைத்து, மீனவர்கள் மற்றும் படகை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதிக்கு படகை கொண்டு வந்தனர். அப்போது உரிய அனுமதி கிடைக்காததால், படகு தருவைகுளம் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களையும் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
---
Related Tags :
Next Story