ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலை அமைக்க மண் பரிசோதனை செய்தபோது ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மண் பரிசோதனை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 மீட்டர் தூரம் வரை ரூ.3 ஆயிரத்து 200 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை 6 வழி சாலை அமைக்க உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை பல கிராமங்கள் வழியாகவும், வயல்வெளி மற்றும் ஏரிகள் வழியாகவும் அமைய உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தம்பு நாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து (வயது 59) என்ற ஒப்பந்த தொழிலாளி மற்றும் 6 பேர் கொண்ட குழுவினர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னலூர்பேட்டை கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று மாலை இரும்பு பேரல்களை கொண்டு படகு போல் தயார் செய்து மண் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.
சமீபத்தில் பெய்த மழையால் ஏரி முழுவதுமாக நிரம்பி உள்ளது. தண்ணீரில் மண் பரிசோதனை செய்து கொண்டிருந்த சுடலைமுத்து திடீரென்று தவறி ஏரியில் மூழ்கி விட்டார். அவரை மீட்க சக தொழிலாளர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை.
சாவு
இது குறித்து அவர்கள் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தேர்வாய் கண்டிகையில் உள்ள சிப்காட் தீயணைப்புத்துறை வீரர்களுடன் ஏரிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி பலியான சுடலைமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.இது குறித்து பென்னலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 6 வழிச்சாலை அமைக்க ஏரியில் மண் பரிசோதனை மேற்கொண்டபோது தொழிலாளி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story