வைகை அணையில் இருந்து ஆற்றில் நீர் திறப்பு நிறுத்தம்


வைகை அணையில் இருந்து ஆற்றில் நீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 10 March 2022 9:13 PM IST (Updated: 10 March 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஆற்றில் திறக்கும் நீர் நிறுத்தப்பட்டது.

தேனி: 

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 71 அடி. கடந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக அளவில் திறக்கப்பட்ட தண்ணீராலும் வைகை அணை நிரம்பியது. கடந்த ஜீன் மாதத்தில் இருந்து தொடர்ந்து 9 மாதங்களாக அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 3-ந்தேதி பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 

அதே நேரத்தில் கடந்த 5 மாதத்துக்கும் மேலாக வைகை அணையில் 67 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இன்று அணையின் நீர்மட்டம் 68.62 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 172 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் வழியே திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்கள் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைகை ஆற்றின் வழியே குறைந்த அளவு தண்ணீராவது திறந்து விட வேண்டும் என்ற கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story