ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஊராட்சி தலைவர்.
x
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஊராட்சி தலைவர்.
தினத்தந்தி 11 March 2022 12:30 AM IST (Updated: 10 March 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்காழி:-

சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

முன்விரோதம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (வயது60). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். சட்டநாதபுரம் கிராமம் ஆதித்யா நகரை சேர்ந்தவர் விசாகர். தி.மு.க.வை சேர்ந்த இவர் ஒன்றியக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. 
நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்விரோதம் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

கட்டையால் தாக்குதல்

இந்த நிலையில் சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மனோன்மணியம் நகர் முதல் கலியபெருமாள் நகர் வரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சி சார்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இந்த பணியினை நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி, பொறியாளர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஒன்றியக்குழு உறுப்பினர் விசாகர் உள்ளிட்ட சிலர் முன்விரோதம் காரணமாக தெட்சிணாமூர்த்தியை சரமாரியாக கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு அசம்பாவிதம் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தெட்சிணாமூர்த்தி தன்னை தரக்குறைவாக திட்டி, தாக்கியதாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் விசாகர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story