நான்கு வழிச்சாலையின் குறுக்கே சாலை வசதி செய்து தரவேண்டும்


நான்கு வழிச்சாலையின் குறுக்கே சாலை வசதி செய்து தரவேண்டும்
x
தினத்தந்தி 10 March 2022 10:35 PM IST (Updated: 10 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு சாலை வசதியை செய்து தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை
உடுமலை அருகே நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு சாலை வசதியை செய்து தரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு வழிச்சாலை
பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை கிராமப்புறங்களிலும் அமைகிறது. அதன்படி உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் பகுதியில் இந்த பணிகள் நடந்து வருகிறது. 
இந்த நான்கு வழிச்சாலை அமைவதற்கு முன்பு அந்த இடத்தில் குறுக்கே சென்று வருவதற்கு சாலை இருந்தது. இந்த சாலை வழியாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு சென்று வருவது வழக்கம். தற்போது இந்த சாலையின் குறுக்கே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதால், நான்கு வழிச்சாலையின் இருபுறமும் உள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது சில கி.மீ.தூரம் சுற்றிதான் சென்று வரவேண்டியுள்ளது.
அதனால் விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு சிரமங்கள் ஏற்படுவதாக அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.
விவசாயிகள் கோரிக்கை
இந்த நிலையில் அந்த பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட சுமார் 40 பேர் அங்கு நான்கு வழிச்சாலைப்பணிகள் நடக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், நான்கு வழிச்சாலைப்பணிகளில் ஈடுபட்டுள்ள மண் லாரிகள் முன்பு திரண்டு நின்று அங்கிருந்த அதிகாரிகளிடம், கிராம சாலைகளை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே சாலை வசதியை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துச்சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு நிலவியது. 

Next Story