திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது. இன்று யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது.
உடுமலை
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் பகுதி மின்னொளியில் ஜொலிக்கிறது. இன்று யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது.
உடுமலை திருப்பதி கோவில்
உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம்4-ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து, சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தின் நுழைவுப்பகுதியில் தற்போது அழகிய வேலைப்பாடுகளுடன் 69 அடி உயரத்தில் 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
அத்துடன் கோவில் பகுதியில் தற்போது ஸ்ரீரேணுகாதேவி கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முன் வாசலில் இரண்டு புறமும் சுழலும் தூண்களும், அழகிய முன் மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரத்திற்கு முன்பு 26 அடி உயரம் உள்ள கருடக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
ராஜகோபுரம்
இந்த கோவிலில் தற்போது கட்டப்பட்டுள்ள 5 நிலை ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீீ ரேணுகாதேவி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. நாளையும் (சனிக்கிழமை) யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 13-ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக 13-ம்தேதி உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் அன்னதானம் நடக்கிறது. இதற்காக கோவில் பகுதியில் பிரமாண்டமான அளவில் 3 அன்னதான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மின்னொளியில் ஜொலிக்கும் கோவில்
கும்பாபிஷேக விழாவையொட்டி உடுமலை-தளி சாலையில், மேம்பாலம் அருகே 70 அடி உயரத்திற்கு ராஜகோபுரம் போன்று மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்பு தளி சாலையில் திருப்பதி வெங்கடாஜலபதி, கோவில் வளாகத்தில் ராஜகோபுரத்திற்கு முன்பு பெருமாள் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி ஆகியோரின் உருவங்கள் பெரிய மின்விளக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் கோவில் முழுவதும் அந்த பகுதியே மின்னொளியில் ஜொலிக்கிறது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மகாகும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் ஜி.ரவீந்திரன், எம்.அமர்நாத், எம்.வேலுச்சாமி மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story